மாணவர்களின் கட்டுரைகள் 2014

நான் செய்த துரோகம்
டிரிங்! டிரிங்! என்று என் கடிகார மணி ஒலித்தது. நான் மின்னல் வேகத்தில் எழுந்து என் அறையின் சன்னல்களைத் திறந்தேன். ஆஹா! என்ன ஒரு காட்சி! என்று நான் நினைத்தேன். கதிரவனை எதிர்பார்த்த செடிக் கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின. இருகரம் நீட்டித் தாவர இனங்கள் கதிரவனை முகமலர்ந்து வரவேற்றன. இதைப் பார்த்த நான், சூரியனைக் கண்ட தாமரையைப் போல் முகம் மலர்ந்தேன்.

கண் மூடிக் கண் திறக்கும் நொடியில், நான் என் காலைக் கடன்களைச் செய்து முடித்தேன். நான் காலை உணவை உண்ட பின், ஒரு குவளையையும் மீன் பிடிக்கும் வலையையும் எடுத்து என் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் நகமும் சதையும் போல் பழகிய என் நெருங்கிய தோழன், மாறனைக் காணக் காத்திருந்தேன்.

திக்..திக்.. என நேரம் போனது. சில கணங்களுக்குப் பின், மாறன் சிறகடித்து ஓடி வந்தான். அவன் கையிலும் ஒரு குவளையும் மீன் பிடிக்கும் வலையும் இருந்தன. நாங்கள் இருவரும் மீன் பிடிக்க எண்ணினோம். மாறனும் நானும் மீன் பிடிக்கும் இடத்திற்குச் செல்லும் வழியில் புன்முறுவல் பூத்துக்கொண்டே பேசிக்கொண்டு சென்றோம்.

எங்களுக்குத் தெரியாமலேயே நாங்கள் எங்களின் இடத்தை அடைந்தோம். அந்த இடம் ஓர் அழகான குளம். ஆனால், அந்தக் குளம் மிகவும் ஆழமான குளமும் ஆகும். “ரவி! இங்கே மீன் பிடிக்கக்கூடாது! அந்த அறிவிப்புப் பலகையைப் பார்!” என்று மாறன் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து கூறியவாறே அந்த அறிவிப்புப் பலகையைச் சுட்டிக்காட்டினான். ஐயோ, மாறா! பரவாயில்லை! இங்கே யாருமே இல்லை. நாங்கள் செய்யப் போகிறச் செயலில் தவறே இல்லை,” என்று நான் அவனிடம் பதிலளித்தேன். சரி என்று சொல்லாமல் மாறன் தன் தலையை மட்டும் அசைத்தான்.

நாங்கள் குளங்கரையில் உட்கார்ந்தோம். குளத்தில் சிறு சிறு வண்ணங்கள் நிறைந்த மீன்கள் இருந்தன. மாறனும் நானும் மீன்களைப் பிடிக்க ஆரம்பித்தோம். மாறன் இரண்டு மீன்கள் மட்டுமே பிடித்திருந்தான். ஆனால், நான் ஐந்து மீன்களைப் பிடித்திருந்தேன். அதை எண்ணி நான் மயிலைப் போல் பெருமையாக இருந்தேன்.

யாரும் எதிர்பார்க்காத வேளையில், ஓர் ஆடவரும் ஒரு பெண்மணியும் எங்களை நோக்கி வந்தனர். அவர்கள் எங்களின் செயலைப் பார்த்தபோது, “இப்படிச் செய்யக்கூடாது!” என்று எங்களிடம் கூறினர். ஆனால், நாங்கள் அவர்கள் கூறியதைக் கேட்கவில்லை. இதைக் கவனித்த அந்த ஆடவர் கோபமடைந்து தம் பற்களை நற நற என்று கடித்தார். பின், அவர்கள் எங்களை விட்டுப் பூங்காவை உலாவச் சென்றார்கள்.

திடீரென்று மாறன் தன் கால் வழுக்கி குளத்தில் தொப் என்று விழுந்தான். அவன் தண்ணீரில் தன் கைகளை அங்குமிங்கும் அசைத்தவாறே தத்தளித்துக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்து என் கைகள் நடுங்கின. என் உடல் பதறியது. என் முகத்தில் ஈ ஆடவில்லை. டப் டப் டப் டப் என்று என் மனம் பதை பதைத்தது. என் இதயத் துடிப்பே நின்றுவிடுவது போலிருந்தது. மாறன் இறக்கப் போகிறானா? அவன் தண்ணீரில் மூழ்கிவிடுவானா?’ என்ற எண்ண அலைகள் என் மனத்திரையில் தோன்றின. முத்துக்கள் போல் விழுந்த என் வியர்வைத் துளிகளை நான் துடைத்தேன். சோகமே வடிவாய் இருந்த என் முகம் தன்னம்பிக்கை ஒளியுடன் காட்சியளித்தது. என் மனத்தில் ஒரு யோசனை உதித்தது.

“உதவி! உதவி! யாராவது இங்கே வாருங்கள்!” என்று நான் உதவிக்கு உரக்க கத்தினேன். அப்போது சற்றுமுன் எங்களைக் கடந்து சென்ற இரண்டு பேரும் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள் மாறன் தண்ணீரில் மூழ்கத் தொடங்கிவிட்டான். கண்ணீர் மாலை மாலையாய் என் கண்களில் வடிந்தது. அந்த ஆடவர் நீச்சல் தெரிந்தவர். அவர் அந்த ஆழமான குளத்தில் குதித்தார். அவர் மாறனைக் குளத்திலிருந்து தூக்கி வந்தபோது மாறனின் கண்கள் மூடப்பட்டிருந்தன.

நாங்கள் மூவரும் மாறனைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சிறுத்தைப் போல் விரைந்தோம். சற்று நேரத்தில், மாறன் மருத்துவமனையின் பரிசோதனை செய்யும் அறையில் இருந்தான். நான் எங்களுடைய பெற்றோர்களோடு தொடர்பு கொண்டேன். அவர்கள் நால்வரும் மருத்துவமனைக்கு வாயிலும் தலையிலும் அடித்துக்கொண்டே ஓடி வந்தனர். மாறனின் தாயார் கதறி அழுதார். அவன் தந்தை வாயை மூடிக்கொண்டு நிறுத்தாமல் அழுதார்.

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தார். அவர் தன் தலையைத் தொங்கப் போட்டார். மாறன் உயிர் பிழைக்கவில்லை என்ற செய்தியை அவர் எங்களிடம் சொன்னார். மாறனின் பெற்றோர் தங்கள் தலைகளை அடித்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினர்.

ஐயோ! அவன் அப்போதே வேண்டாம் என்றானே?!’ என்ற எண்ணம் என் மனத்திரையில் தோன்றியது. என்னால் தான் அவன் உயிர் இந்த உலகத்தை விட்டுப் போனது என்று நான் எண்ணித் தேம்பித் தேம்பி அழுதேன். அழுவதால் என்ன, அவன் திரும்பி வரப்போகிறானா என்ன? இல்லை! முடிந்தது முடிந்துவிட்டது! என்று நான் என்னையே நொந்துகொண்டேன்.

என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் என் நண்பனுக்குச் செய்த துரோகத்தை மறக்கவே மாட்டேன்.



ஜீவிதா
6Sapphire




நாங்கள் செய்த தவறு
காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது. ரீங்.. என்று என் கடிகார மணி ஒலித்தது. அப்போது நான் நேரத்தைப் பார்த்தபோது மணி எட்டாகிவிட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நானும் என் நண்பனும் செங்காங் பூங்காவுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். நான் சீக்கிரமாக என் காலைக் கடன்களை முடித்துவிட்டு மீன் பிடிக்கும் வலைகளையும் பிடித்த மீனை வைக்க குவளைகளையும் எடுத்துக்கொண்டு ரவியின் வீட்டிற்குச் சென்றேன். அவன் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே பேருந்து நிறுத்தத்தை அடைந்தோம்.

நாங்கள் இருவரும் பேருந்தில் ஏறி செங்காங் பூங்காவைச் சென்றடைந்தோம். அது காலை நேரம் என்பதால் அங்கு நிறைய குடும்பங்கள் இருந்தன. அங்கு மீன் பிடிக்கக்கூடாது என்ற ஓர் அறிவிப்புப் பலகையும் இருந்தது. அதைப் பார்த்தும் பார்க்காதது போல் நாங்கள் நடந்து சென்றோம். ஆ! இன்று இங்கு நிறைய மீன்கள் இருக்கின்றன! என்று நான் ஆனந்தத்துடன் கூறினேன். ரவியும் புன்முறுவல் பூத்தான்.
நாங்கள் எங்களின் வலைகளை எடுத்து மீன் பிடிக்க ஆரம்பித்தோம். நிமிடங்கள் உருண்டோடின. “ஆ! இன்னும் எந்த ஒரு மீனும் வலையில் சிக்கவில்லையே,” என்று எரிச்சலுடன் கத்தினான், ரவி. “சரி, பரவாயில்லை,” என்று நான் அவனைச் சமாதானப்படுத்தினேன். அப்போது, ஏதோ என் வலையை இழுக்கிறது! என்று கூச்சலிட்டான், ரவி. வலையை இழுத்த போது அதில் ஒரு சிறு மீன் தான் இருந்தது. ஐயோ! என்று ரவி அலறினான். நான் அவனைப் பார்த்துச் சிரித்தேன். அதை ஒரு தம்பதியர் பார்த்துவிட்டனர்.

அந்த ஆடவர் என்னையும் ரவியையும் கடு கடு என்று திட்டினார். செவிடனுக்கு ஊதிய சங்கு போல் அவர் சொன்னது எங்களின் காதுகளில் விழவில்லை. நாங்கள் தொடர்ந்து மீன் பிடித்தோம். திடீரென்று “ஆ! என்ற சத்தம் என் காதில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தபோது ரவி அனலில் பட்ட புழு போல் குளத்தில் தத்தளித்துக்கொண்டு இருந்தான். நான் என்ன செய்வதென்று அறியாமல் திரு திரு என்று விழித்தேன். ரவி குளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த நான் வாயைப் பிளந்து சிலையாய் நின்றேன்.

மின்னல் வேகத்தில் என் மனத்தில் ஒரு யோசனை தோன்றியது. நான் உடனே “உதவி! உதவி!” என்று அலறினேன். அங்கு நின்றுகொண்டிருந்த தம்பதியர் ஓடி வந்தனர். அந்தப் பெண்மணி அவசர மருத்துவ வண்டி சேவையுடனும் காவலர்களுடனும் தொடர்புகொண்டார்.

“இயோ...” என்று அவசர மருத்துவ வண்டியின் சத்தம் என் காதில் விழுந்தது. காவலர்கள் குளத்தில் இறங்கி ரவியை வெளியே இழுத்து அவசர மருத்துவ வண்டியினுள் வைத்தார்கள். சற்று நேரத்தில் நானும் அந்தத் தம்பதியரும் ரவியுடன் மருத்துவமனையைச் சென்றடைந்தோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல், “பயப்படாதே!” என்று அந்தத் தம்பதியர் என் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு என்னிடம் கூறினார்கள்.

ரவி உயிர் பிழைத்தான் என்ற செய்தியை அறிந்து அந்தத் தம்பதியர் எங்கள் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டனர். எங்களின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் எங்களைக் கடு கடு என்று திட்டினார்கள். நானும் ரவியும் இனிமேல் இதுபோல் செய்யமாட்டோம் என்று உறுதி பூண்டோம். 



. டிவாஷினி
6Opal



நான் செய்த ஒரு நற்செயல்
“டிங் டாங்! டிங் டாங்!” என்று பள்ளி மணி சத்தமாக ஒலித்தது. அதைக் கேட்ட என் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மின்னல் வேகத்தில் தங்கள் பள்ளிப்பைகளைத் தூக்கிக்கொண்டு வகுப்பறையைவிட்டுச் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓடினர். அலறுதலும் கீச்சிடுதலும் எங்கும் கேட்கப்பட்டது. நானும் அவர்களோடு சேர்ந்து வேகமாக ஓடினேன். அன்று என் தாயாருக்குப் பிறந்தநாள் என்பதால் நானும் என் அக்காவும் பல இனிப்புப் பண்டங்களையும் பலகாரங்களையும் வாங்க எண்ணினோம்.

நான் என் பள்ளியை விட்டு வெளியேறினேன். பக்கத்தில் மரங்களிலிருந்த பறவைக் குஞ்சுகள் மகிழ்ச்சியாகக் கீச்சிட்டுப் பாடிக்கொண்டிருந்தன. நான் என் மனத்திற்குள் மகிழ்ச்சியாக, “இன்பமான பிறந்தநாள்!” என்று பாடினேன். அப்போது நான் சென்றுகொண்டிருந்த பாதையில், உடல் ஊனமுற்ற ஒருவர் சாலையைக் கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவர் பதற்றத்துடன், “ஆ! எப்படிச் சாலையை விரைவாகக் கடப்பது? நான் என் வீட்டிற்குச் சீக்கிரம் செல்லாவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை,” என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அவரைப் பார்க்க சற்று பரிதாபமாக இருந்தது. உடனே நான் அந்த ஆடவரின் அருகில் சென்று, “நான் உங்களுக்கு உதவி செய்யலாமா?” என்றேன். அதற்கு அவர், “ஆம்! என்றார். நான் அவர் உட்கார்ந்திருந்த சக்கர நாற்காலியைச் சாலையில் வைத்து அதைச் சாலை குறுக்கே ஓட்டிச் சென்றேன். அப்போது நான் அந்த ஆடவருக்கு இந்தச் செயலைச் செய்ததற்கான காரணத்தை எனக்குள் கேட்டுக்கொண்டேன். நீ அவரைப் போல் ஓர் உடல் ஊனமுற்ற சிறுவனாக இருந்தால், இந்தச் சாலையைக் கடப்பதற்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? நினைத்துப் பார்,’ என்று நான் என் மனத்திற்குள் யோசித்தேன். அதனால்தான் அவருக்கு உதவ முன்வந்தேன் என்பதை நான் உணர்ந்தேன். சாலையைக் கடந்த பின்னர் அந்த உடல் ஊனமுற்ற ஆடவர், “நன்றி!” என்று கூறினார்.

ஆனால் உடனே நான், “ஐயா! நான் உங்கள் வீட்டுக்கு உங்களைத் தள்ளிக்கொண்டு வருகிறேன்,” என்றேன். ஒரு கணம் அந்த ஆடவர் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருந்தார். மீண்டும் அந்த ஆடவர் என்னைப் பார்த்தபோது, கண்ணீர் அவர் கண்களிலிருந்து வழிந்தோடியது. “உன்னைப்போல் ஓர் அன்பான சிறுவனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை!” என்றார். நான் அதைக் கேட்டுப் பெருமையோடு அந்த ஆடவரை அவர் வீட்டிற்குத் தள்ளிக்கொண்டு சென்றேன். நாங்கள் அவரின் வீட்டை அடைந்ததும், அந்த ஆடவர் எனக்குப் பணத்தை அன்பளிப்பாகக் கொடுக்க எண்ணினார்.

ஆனால், நான் அதை மறுத்தேன். நான் மீண்டும் என் வீட்டிற்கு நடந்து சென்றேன். என் மனநிலை அன்று மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒரு நற்செயலைச் செய்த மகிழ்ச்சியோடு என் வீட்டை வந்தடைந்தேன். என் அம்மாவின் பிறந்தநாளுக்கு இனிப்புப் பண்டங்களையும் பலகாரங்களையும் என் அக்காவுடன் சேர்ந்து சென்று என்னால் வாங்கமுடியவில்லை என்றாலும், அந்த நாளை என்னால் மறக்க முடியவில்லை.
 

              முகமது   ஜாசிம்
6 Sapphire




எதிர்பாராத சம்பவம்
கதிரவனின் வருகையை எதிர்பார்த்த செடிக் கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின. இருகரம் நீட்டித் தாவர இனங்கள் கதிரவனை முகமலர்ந்து வரவேற்றன.

“சரி மாணவர்களே. இடைவேளைக்கு நீங்கள் புறப்படலாம். ஆனால், நான் ரவியையும் மாறனையும் சற்று நேரத்திற்குப் பார்க்க வேண்டும்,” என்று என் ஆசிரியர் அறிவித்தார். நானும் மாறனும் நகமும் சதையும் போல் பழகும் நண்பர்கள். ஆனால், ஏன் என் ஆசிரியர் என்னையும் மாறனையும் கூப்பிட்டார் என்பது எங்களுக்குக் குழப்பமாக இருந்தது.

என் கைகள் நடுங்கின. என் மனம் பதை பதைத்தது. பயத்தில் என் உடல் பதறியது. ஆசிரியர் எங்களிடம் ஒரு கெட்ட செய்தியைச் சொல்லப்போகிறாரா? நல்ல செய்தியைச் சொல்லப்போகிறாரா?’ என்ற எண்ண அலைகள் என் மனத்திரையில் தோன்றின. முத்துகள் போல் நெற்றயிலிருந்து விழுந்த வியர்வைத் துளிகளை நான் துடைத்தேன்.

“சரி மாணவர்களே! நீங்கள் இருவரும் உங்கள் ஆண்டு இறுதித் தேர்வில் சிறப்பாகச் செய்ததால் உங்களுக்கு உதவித் தொகை பள்ளி மூலம் கிடைக்கும்,” என்று என் ஆசிரியர் சொன்னார். அச்செய்தி எனக்கும் மாறனுக்கும் தேன் போல் இனித்தது. நாங்கள் மகிழ்ச்சியில் உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தோம். நானும் மாறனும் இடைவேளையின்போது அந்தச் செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

மின்னல் வேகத்தில் சில நாள்கள் உருண்டோடின. அன்று அந்த உதவித் தொகை கிடைக்க நானும் மாறனும் என் ஆசிரியரும் ஓர் இடத்திற்குச் சென்றோம். அந்த நிகழ்ச்சியை அவ்விடத்தில் நடத்த என் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது. அந்த இடம் அழகான மரங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நான் அதைப் பார்த்து என் வாயை ஆச்சரியத்தில் பிளந்தேன்.

பின், எல்லாரும் வந்தபின், அந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தார். கண் மூடிக் கண் திறக்கும் நொடியில், நான் மேடைக்குச் செல்லும் முறை வந்தது. நான் மேடையில் பெருமையுடன் ஏறினேன். எல்லாரும் கைத்தட்டினர். நான் என் உதவித் தொகை கடிதத்தை எடுத்துக்கொண்டு என் இருக்கைக்குத் திரும்பிச் சென்று உட்கார்ந்தேன்.

நான் அவசரத்தில் அந்தக் கடிதத்தைத் திறந்தேன். அங்கு ரவிக்கு இரண்டாயிரம் வெள்ளி பணம் என்று எழுதப்பட்டு இருந்தது. திடீரென்று ஒரு பத்து வயது சிறுமி என் கடிதத்தை எடுத்து ஓடினாள். “திருடி! திருடி!” என்று நான் கத்தினேன். பயம் என்னைக் கௌவியது. தக்கத் தருணத்தில் சிலர் அந்தச் சிறுமியைப் பிடித்தனர்.

“ஏன் என்னுடைய கடிதத்தை எடுத்து ஓடினாய்?” என்று நான் கேட்டேன். அவள் தன் பெற்றோர் ஏழை என்றும் அதனால் அவள் அவர்களுக்காகத் திருடி தன் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வருகிறாள் என்றும் சொன்னாள். பின், காவலர்கள் அவளைத் தன் வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

என் ஆசிரியரும் மாறனும், “ரவி.. ரவி.. உனக்கு எதுவும் ஆகவில்லையே!” என்று பதற்றத்துடன் கேட்டனர். ஆனால், நான் அந்தச் சிறுமியின் நிலையை எண்ணி வருந்தினேன். பாவம்! ஆனால், அவள் தன் சூழ்நிலையைக் காவலர்களிடம் சொல்லி, காவலர்கள் தக்க நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று நான் நம்பி, என் ஆசிரியருடனும் மாறனுடனும் வீடு திரும்பினேன். அன்று எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாகும்.


ஜீவிதா
Sapphire


  மாறனைக் காணவில்லை!
“மாலா, ரகு!” என்று தமிழ் ஆசிரியர், திருமதி லீ இருவரையும் அழைத்தார். இருவரும் அவரிடம் விரைந்து சென்றனர். “மாறனை இன்னும் காணவில்லை!” என்று மாலா கூறினாள். “சற்று பொறுமையாக இருங்கள்! அவன் இப்போது வந்துவிடுவான்!” என்று திருமதி லீ இருவருக்கும் ஆறுதல் சொன்னார். அவர் மாலாவையும் ரகுவையும் போட்டிக்குத் தாயாராக இருக்கச் சொன்னார். நாடகப் போட்டி தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. அதனால் திருமதி லீ மாலாவையும் ரகுவையும் தங்களின் நாடக உடையில் மாற்றிக் கொள்ள சொன்னார்.
இருவரும் தங்கள் நாடக உடைகளில் மாற்றிக் கொண்டனர். கண் மூடிக் கண் திறப்பதற்கு முன் மாலாவும் ரகுவும் திரும்பி வந்தனர். போட்டி இன்னும் அரை மணி நேரத்தில் தொடங்க இருந்தது. ரகு பதற்றத்துடன், “மாறனைக் காணவில்லை,” என்று கூறினான். இதைக் கேட்ட திருமதி லீயின் கண்கள் அகல விரிந்தன. பயம் அவரைக் கௌவியது. “என்ன? இன்னும் மாறனைக் காணவில்லையா?” என்று திருமதி லீ கேட்டார். அவர் உடனே மாலாவையும் ரகுவையும் முழு அரங்கத்தையும் தேடுமாறு கட்டளையிட்டார். மாலாவும் ரகுவும் எல்லா இடங்களையும் தேடினர். அவர்கள் கழிவறையில் கூட தேடினர். ஆனால், மாறன் காண்பதாகத் தெரியவில்லை. முயற்சியைக் கைவிட்டு, முகம் வாடி இருவரும் திருமதி லீயிடம் அந்தச் செய்தியைக் கூறினர். திருமதி லீ கவலைப்பட்டார்.
அவர் மாறனையும் ரகுவையும் நாடகப் போட்டிக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கச் சொன்னார். திருமதி லீ மாறனின் தொலைபேசிக்கு அழைத்தார். ஆனால், அவரின் அழைப்பு சென்றுகொண்டே இருந்தது. மாறன் தொலைபேசியை எடுக்கவில்லை. நாடகப் போட்டி தொடங்க இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன. அச்சம் அவரின் முகத்தில் எழுதியிருந்தது. திருமதி லீ மெதுவாக மேடையின் பின்புறத்துக்குச் சென்றார்.
அப்போது நிகழ்ச்சி அறிவிப்பாளர் மேடையில் பேசத் தொடங்கினார். மாணவர்களின் பரபரப்பும் மகிழ்ச்சியும் அவரின் பேச்சைக் கேட்க இயலாமல் செய்தன. திருமதி லீ பயத்தில் நடுங்கினார். அவரின் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வியர்வை அவரின் முகத்தில் வடிந்தது. அறிவிப்பாளர், “இப்போது நாடகப்போட்டி தொடங்கும்!” என்று கூறினார். “முதலில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி நடிக்கும்! என்றார். தக்க சமயத்தில், மாறன் மேடைக்கு ஓடி வந்தான். பின், ரகுவும் மாலாவும் வந்தனர். மாணவர்களின் கைத்தட்டல் அரங்கத்தையே அதிர வைத்தது. திருமதி லீ நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
பின், மூவரும் நடிக்கத் தொடங்கினர். அவர்கள் சிறப்பாக நடித்து பலத்த கரவொலி பெற்றனர். மற்ற பள்ளிகளும் நாடகத்தில் நன்றாக நடித்தன. ஆனால், போட்டியில் யார் முதல் பரிசு பெற்றது தெரியுமா? ஆம்! அதுதான் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி!


    முகமது ஜாசிம்
Sapphire




நாடகப் போட்டி
கதிரவனின் வருகையை எதிர்பார்த்த செடிக் கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கின. இருகரம் நீட்டித் தாவர இனங்கள் கதிரவனை முகமலர்ந்து வரவேற்றன.
“மாணவர்களே! எல்லாரும் இங்கே வந்து வரிசையில் உட்காருங்கள்! பேருந்து வந்துவிட்டது!” என்று என் ஆசிரியர் புன்னகையுடன் அறிவித்தார். “சரி!” என்று நாங்கள் ஆனந்தத்தில் பதிலளித்தோம். கண் மூடிக் கண் திறக்கும் நொடியில், நாங்கள் வரிசையில் உட்கார்ந்தோம். நாங்கள் எங்களின் குழுமப் பள்ளிகளுடன் நாடகப் போட்டி ஒன்றில் போட்டியிட இருந்தோம் என்று எண்ணி உல்லாச வானில் சிறகடித்துப் பறந்தோம்.
ஆசிரியர் எங்களைப் பேருந்தில் ஏறச் சொன்னார். நாங்கள் பேருந்தில் ஏறினோம். “ராமு, இன்னும் மாறா வரவில்லையா?” என்று நான் ராமுவிடம் வருத்தத்துடன் கேட்டேன். “குமார், அவன் சொந்தமாக வருவான்,” என்று ராமு என்னிடம் பதிலளித்தான். “அதைப் பற்றி எல்லாம் பேசவேண்டாம். நம் குழுமப் பள்ளிகளோடு போட்டிப் போடப் போகிறோம் என்று எனக்கு மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது,” என்று நான் ராமுவிடம் கூறினேன்.
பேருந்தில் நாங்கள் பேசிக்கொண்டே நாடகப்போட்டி நடைபெறும் இடத்தை வந்தடைந்தோம். நாங்கள் விரைவாகப் பேருந்திலிருந்து இறங்கினோம். அங்கே ஓர் அதிகாரி எங்களை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் அந்த அறைக்குச் சென்றதும் நாங்கள் எங்களுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டோம்.
“ஆசிரியர், ஆசிரியர்! இன்னும் மாறன் வரவில்லையே!” என்று நான் பதற்றத்துடன் என் ஆசிரியரிடம் கேட்டேன். “ஆமாம், மாறன் எங்கே? இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கிறதே! நான் இப்போதே அவனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன்,” என்று ஆசிரியர் சொன்னார்.
அவர் சிறுத்தைப் போல் தன் தொலைபேசியை எடுத்தார். சக் சக் என மாறனின் தொலைபேசி எண்ணை தொலைபேசியில் அழுத்தினார். திடீரென்று என் ஆசிரியரின் முகம் வாடியது. அவர் கைகள் நடுங்கின.
“குமார், அவன் தன் தொலைபேசியை எடுக்கவில்லை. இப்போது நாம் நடிக்க வேண்டிய முறை. என்ன செய்வது? நீ முதலில் உன் வேடத்தை நடித்து வா,” என்று என் ஆசிரியர் சொன்னார். நான் மேடையில் போய் என் பள்ளியையும் என்னையும் அறிமுகம் செய்தேன். பாவம் என் ஆசிரியர்! அவர்தன் கடிகாரத்தைப் பார்த்து பார்த்து வேதனை அடைந்தார்.
“சரி ரசிகர்களே! இப்போது பாரதியாராக இதோ மா... மாறன் வருகிறான்,” என்று நான் பயத்தில் வார்த்தைகளை உச்சரித்தேன். ஆனால், மாறன் இன்னும் வரவில்லை. எல்லோரும் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.
திடீரென்று, மாறன் பார்வையாளர்களின் பின்னாலிருந்து வந்தான். “நான் தான் பாரதியார். ஏன் நான் பின்னாலிருந்து வருகிறேன் என்று எண்ணுகிறீர்களா? நான் உயிர் பிழைத்து வருகிறேன்,” என்று மாறன் பார்வையாளர்களிடம் கூறினான். அவன் மேடைக்குப் போகும்போது எல்லோரும் கைத்தட்டினார்கள்.
என் ஆசிரியர் சிலை போல் வாயைப் பிளந்து நின்றார். அவர் மாறன் ஓர் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறான் என்று எண்ணி பெருமைப்பட்டார்.
போட்டி முடிந்தது. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. “சரி, இப்போது வெற்றி பெற்ற பள்ளி.... பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி,” என்று அறிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும் மகிழ்ச்சியும் ஆரவாரமும் எங்கள் முகங்களில் தாண்டவம் ஆடின.
ஆனால், மாறன் இல்லையென்றால் நாங்கள் தோல்வி அடைந்திருப்போம். என் கடைசி மூச்சு இருக்கும் வரை நான் இந்தச் சம்பவத்தை மறக்கமாட்டேன்.


ஜீவிதா
Sapphire



எதிர்பாராத சம்பவம்
        கதிரவன் தன் கடமையைச் செய்ய விரைந்து எழுந்தான். நானும் என் குடும்பத்தினர்களும் புதிதாகத் திறந்திருந்த கேளிக்கைச் சந்தைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு வாடகை உந்துவண்டியில் ஏறி, அந்தக் கேளிக்கைச் சந்தையை வந்தடைந்தோம். அங்கே மக்கள் நிரம்பி வழிந்தனர். என் தந்தை நுழைவுச்சீட்டுகளை வாங்கி வந்தார். நாங்கள் நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்த அதிகாரியிடம் நுழைவுச்சீட்டுகளைக் கொடுத்தோம். அவர் நுழைவுச்சீட்டுகளில் பாதியைக் கிழித்து மீதியை எங்களிடம் கொடுத்தார்.
    அங்கே நிறைய விளையாட்டுகள் இருந்தன. கண்டது கனவா? நனவா? என்று யூகிக்க முடியாத அளவிற்கு அந்த இடம் பிராமாண்டமாக இருந்தது. அப்போது யானை, எலி போன்ற உடைகளை அணிந்துகொண்டவர்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்தோம். அத்தருணத்தில் என் தந்தை தின்பண்டங்கள் வாங்கி வந்தார். அதன் பிறகு, எனக்கும் என் அக்காவுக்கும் என்ன விளையாட்டு விளையாடுவது என்று தெரியவில்லை. அப்போது விமான வடிவத்தில் இருந்த ராட்டினம் எங்கள் கண்களை ஈர்த்தது. “அப்பா, நான் அந்த விளையாட்டை விளையாடலாமா?” என்று என் அப்பாவை நான் கேட்டேன். “முடியாது!” என்று எங்களுடைய அப்பா உறுதியாகப் பதிலளித்தார். நாங்கள் அவரைக் கெஞ்சிக் கேட்டோம். கடைசியில் அப்பா, “சரி,” என்று கூறினார். எங்களின் முகங்களில் உவகை கரை புரண்டது.
    நாங்கள் அந்த ராட்டினத்தில் ஏறி அமர்ந்தோம். ராட்டினம் சுற்றத் தொடங்கியது. நானும் என் அக்காவும் ஆரவாரம் செய்தோம். எங்களுடைய அம்மா எங்களைப் பார்த்து கை அசைத்தார். திடீரென்று ராட்டினம் நின்றது. எங்களுடைய பெற்றோர் எங்களைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்கள் பீதியில் உறைந்து நின்றோம். என் அக்கா அவள் கண்ணீர் துளிகளை விழிகளில் சிறை அடைத்தாள். விவரிக்க முடியாத அதிர்ச்சி எங்களின் முகங்களில் அலை மோதியது. சற்று நேரத்தில், பழுதுப்பார்ப்பவர் அந்த இடத்தை வந்து அடைந்தார். அவர் இயக்கப் பலகைக்குச் சென்று சில விசைகளை அழுத்தினார். உடனே ராட்டினம் கீழே இறங்கியது. நான் விரைந்து சென்று என் தாயைக் கட்டி அணைத்தேன். என்னை மன்னித்து விடும்படி நான் என் தந்தையைக் கெஞ்சிக் கதறிக் கேட்டேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை நான் இந்தச் சம்பவத்தை மறக்கமாட்டேன். 



க.டிவாஷினி
Opal