வெள்ளி, 28 மார்ச், 2014

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! - 1

ஒரு சமயம் குற்றவாளி ஒருவனுக்கு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டது. அவனிடம் மூன்று வெவ்வேறு அறைகள் பற்றிக் கூறப்பட்டது. அந்த அறைகளிலிருந்து ஒன்றை அவன் தேர்வு செய்யவேண்டும் என்றும் அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நிலைமைகள் இருந்தன. அவை பின்வருமாறு:

அறை 1 - ஆயிரக்கணக்கான கொடிய விஷப் பாம்புகளைக் கொண்ட அறை

அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை

அறை 3 - மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை


இறுதியில் குற்றவாளி ஓர் அறையைத் தேர்வு செய்து உள்ளே சென்றான். அவன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்ததால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவனும் இனிமேல் தவறு செய்யமாட்டான் என்று உறுதி பூண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் எந்த அறையைத் தேர்வு செய்திருப்பான்? அவன் எப்படிச் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் அவ்வறையில் உயிருடன் இருந்தான்?

எப்படி? எப்படி? அப்படி! அப்படி!

உங்களுக்குப் பதில் தெரிந்தால், உடனே கீழே கருத்துரையிடுக. கருத்துரை செய்வதில் உதவி தேவைப்பட்டால், மேலே கருத்துரைப்பது எப்படி? என்பதை கிலிக் செய்து உதவி பெறுங்கள்! 

சரியான பதில் கூறும் முதல் மாணவனுக்குப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது!

செவ்வாய், 25 மார்ச், 2014

சனி, 15 மார்ச், 2014

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 07/03/2014

07 மார்ச் 2014 அன்று இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இடம்பெற்றது. இவ்வாண்டு தமிழ் மாணவர்கள் அனைவரும் நடன அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்கு நமது பள்ளித் தமிழ் வலைப்பூவில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டன. அது மட்டுமின்றி, பிளாங்கா ரைஸின் ஒரு நிமிடத் திறன்’, மாணவர்ப் படைப்புகள்’, எப்படி? எப்படி? அப்படி! அப்படி! போன்ற அங்கங்களில் மாணவர்கள் எப்படித் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்பது குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விரைவிலேயே இன்னும் கூடுதலான மாணவர்களின் படைப்புகளையும் திறன்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கலாம். அந்த மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 

 

சனி, 1 மார்ச், 2014

உங்கள் சிந்தனைக்கு

ஒரு சமயம், ஒரு குருவும் அவனுடைய சீடனும் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் துளிவிட்டிருந்த சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல அவனும் சட்டெனெ அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.

சற்றுத் தூரம் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி குரு பணித்தார். சீடன் சற்றுக் கஷ்டப்பட்டு, தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப் பிடுங்கிப் போட்டான்.

இன்னும் சற்றுத் தூரம் சென்ற பிறகு, ஒரு சிறு மரம் அளவிற்கு வளர்ந்திருந்த செடி ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்தும் அவனால் அதைப் பிடுங்க முடியாமல் போய்விட்டது.

அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு, “பிரச்சினைகளும் இப்படித்தான்! என்று சொன்னார். உடனே சீடன் கேட்டான், “பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன தொடர்பு?”

குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி, பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம். அதை வளர விட்டு, அது மரம்போல வளர்ந்து பெரிதாகிவிட்டால், பிறகு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது! என்றார்.